பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தின்போது பல ஒத்திவைப்புகளுக்கு இட்டுச்சென்ற 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் “ஒழுங்கற்ற நடத்தை” குறித்து விசாரிக்குமாறு திங்கட்கிழமையன்று மாநிலங்களவை துணைத் தலைவரும் ஐக்கிய ஜனதா தள எம்.பியுமான ஹரிவன்ஷ் தலைமையிலான உரிமைக் குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கர். பிரதமர் நரேந்திர மோதியின் 85 நிமிட உரையின் போது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டுதானிருந்தன. ஆனால் அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் சன்சத் டிவி அவற்றை இருட்டடிப்பு செய்தது. கேமரா எதிர்க்கட்சி இருக்கைகளை நோக்கி நகரவேயில்லை. முன்னதாக, இந்த நடவடிக்கைகளை தனது செல்போனில் பதிவு செய்ததாகக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜனி பாட்டீலை பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் புகாரின் பேரில் இடைநீக்கம் செய்தார் திரு.தங்கர். இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தனது நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பு அளித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் 88 நிமிட உரையின் போது பலமுறை குறுக்கீடுகளை செய்தார் திரு. தங்கர். உரைகளின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு “ஆதாரம் கேட்டு” அவைத் தலைவர் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்ததற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு, ஆதாரங்களை சேகரித்து, பின்னர் இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டால் அது அரசு வழக்கமாக இயங்கும் முறைக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கும்” என்று திரு. கார்கே சுட்டிக்காட்டினார்.
திரு. கார்கேவின் உரையிலிருந்து ஆறு பகுதிகள் மாநிலங்களவை பதிவுகளிலிருந்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உரையின் 18 பகுதிகளும் நீக்கப்பட்டன. நாடாளுமன்றம் என்பது, அரசை நோக்கி கேள்விகளை எழுப்ப எதிர்கட்சிகளுக்கு பொறுப்பளிக்கும் ஒரு தளம். அதேபோல, அந்தக் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பும் அமைச்சரவைக்கு இருக்கிறது. இந்த நோக்கத்தை அடைய காலப்போக்கில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற விதிகளும் வழமைகளும் உள்ளன. அரசிடமிருந்து பொறுப்புக்கூறலைக் கோரும் எதிர்க்கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், விதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பிரச்சினையை குழப்புவதற்கு அனுமதிக்கப்பட்டால், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் அரசு அதன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறது. ஒரு உறுப்பினர் அவையில் வெளிப்படுத்தக்கூடிய எந்தவொரு அனுமானத்துக்குமான ஆதாரத்தை அல்லது ஆதாரமின்மையை தெளிவுபடுத்த வேண்டியது அரசுதான். அது அரசின் கடமையும்கூட. பொதுநலனை பலியிட்டு தனியார் வணிக நலன்களைப் பாதுகாப்பதாக சொல்லப்படும் குற்றசாட்டுகளுக்கு அரசு பதில் தராமல் இருப்பது வினோதமானது. ஆனால், அதே நேரம், கேள்விகளை எழுப்புபவர்கள் ஒழுக்கம் என்கிற பெயரில் இடைநீக்கத்தை எதிர்கொள்கிறார்கள். விவாதங்கள் நடப்பதை உறுதி செய்வதும் அரசு பதில்களை தருவதும்தான் நாடாளுமன்ற ஒழுக்கம்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE